திருச்சி
மின்கம்பியில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பலி
|மின்கம்பியில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.
துறையூர்:
பெயிண்ட் அடிக்க சென்றார்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகரின் மகன் கார்த்திக்(வயது 22). பி.காம். பட்டதாரியான இவர் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். நேற்று காலை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் துறையூரில் இருந்து கீரம்பூருக்கு செல்லும் சாலையில் உள்ள கடலை மிட்டாய் தொழிற்சாலையில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக சென்றுள்ளனர்.
கட்டிடத்தின் மேல் பகுதியில் கார்த்திக் பெயிண்ட் அடித்தபோது, அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் தவறி விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று, சுமார் 2 மணி நேரம் போராடி மின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கின் உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவரது உடலை துறையூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலை மிட்டாய் தொழிற்சாலையின் உரிமையாளரான கீரம்பூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.