பெரம்பலூர்
அரசு பஸ் கண்டக்டரின் வீடு தீப்பற்றி எரிந்தது
|அரசு பஸ் கண்டக்டரின் வீடு தீப்பற்றி எரிந்தது.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலையில் வசித்து வருபவர் கலியபெருமாள்(வயது 52). இவர் பெரம்பலூர்-அரியலூர் இடையே சென்று வரும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், கவிமணி, காவியா என்ற 2 மகள்களும் உள்ளனர். கலியபெருமாள் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். சுமதி, தனது பேரக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், டாக்டரிடம் காண்பிக்க பெரம்பலூருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் காலை 11 மணியளவில் கலியபெருமாளின் வீட்டில் தீப்பற்றி புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதற்கிைடயே கலியபெருமாள் வீட்டின் சமையல் அறை முழுவதும் எரிந்ததில், அங்கிருந்த அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.