< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி அருகே சாலையை கடந்தபோது அரசு பஸ் மோதி ஒருவர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூந்தமல்லி அருகே சாலையை கடந்தபோது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

தினத்தந்தி
|
26 Sept 2023 2:34 PM IST

பூந்தமல்லி அருகே சாலையை கடந்து சென்றவர், அரசு பஸ் மோதி பலியானார். டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் கண்டக்டர் வெளியே வந்து விழுந்தார்.

திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்(தடம் எண் 597) வந்து கொண்டிருந்தது. பஸ்சை பூந்தமல்லியை சேர்ந்த டிரைவர் மணி(வயது 57) என்பவர் ஓட்டினார். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.

நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அவர் மீது பஸ் வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனால் டிரைவர் மணி, பஸ்சை திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. அதே வேகத்தில் டிரைவர் அருகே அமர்ந்திருந்த கண்டக்டர், 'ஏய்' படத்தில் நடிகர் வடிவேலு விழுவது போல் பஸ்சின் முன்புறம் வௌியே வந்து விழுந்தார். இதில் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் பஸ் மோதி காயம் அடைந்த நபரை மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்