< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து; தென் மாவட்ட ரெயில்கள் தாமதம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து; தென் மாவட்ட ரெயில்கள் தாமதம்

தினத்தந்தி
|
11 Dec 2023 2:11 AM IST

தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற தொடங்கியது.

செங்கல்பட்டு,

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி நேற்று 46 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பழைய இரும்பு தளவாட பொருட்கள் இருந்தன. சென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த இரும்பு பொருட்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் (பழைய தாலுகா அலுவலகம் ரெயில்வே கேட் அருகே) வந்தபோது, திடீரென்று சரக்கு ரெயில் தடம் புரண்டது. ரெயிலில் இருந்த 9 பெட்டிகள் அடுத்தடுத்து தண்டவாளத்திலிருந்து விலகி தரையில் சரிந்து நின்றது. தண்டவாளம் இரண்டாக உடைந்தது.

இதையடுத்து சரக்கு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பின்னர் தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற தொடங்கியது. இந்தப் பணி நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த சீரமைப்பு பணி இன்று அதிகாலை தாண்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காலை ரெயில் சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், மாற்று பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். எனினும், சீரமைப்பு பணிகள் முடிய காலதாமதம் ஆனதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்