< Back
மாநில செய்திகள்
ஆசிரியையிடம் பறித்த தங்கச்சங்கிலி கொள்ளையனின் வயிற்றில் இருந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆசிரியையிடம் பறித்த தங்கச்சங்கிலி கொள்ளையனின் வயிற்றில் இருந்தது

தினத்தந்தி
|
24 Dec 2022 1:26 AM IST

சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்கச்சங்கிலி கொள்ளையனின் வயிற்றில் இருந்தது

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி (வயது 40). ஆசிரியையான இவர் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை திடீரென பறிக்கமுயன்றனர். இதில் சுதாரித்த ஆசிரியை அன்னலட்சுமி தங்கச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதில் ஒரு பகுதி திருடர்களின் கையிலும், மறுபகுதி ஆசிரியை அன்னலட்சுமி கையிலும் சிக்கியது.

தொடர்ந்து அன்ன லட்சுமி சத்தம் போட்டதால் அப்பகுதியில் பணியில் இருந்த போலீசார் விரட்டி சென்று கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் சங்கிலியை பறித்தவர்கள் உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம்பட்டியை சேர்ந்த முத்து முனியாண்டி (29), சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த அங்குராஜ் (26) என்பது தெரியவந்தது.

ஆசிரியை அன்னலட்சுமியின் தங்கச்சங்கிலியில் 1¾ பவுன் கொள்ளையர்களிடமும், மீதம் அன்னலட்சுமியிடமும் சிக்கியது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் கொள்ளையர்கள் 2 பேரும் தங்களிடம் சிக்கிய சங்கிலியை காட்டு பகுதியில் வீசி விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத நிலையில் 2 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

விசாரணை நடத்தியதில் முத்து முனியாண்டி தங்கச்சங்கிலி துண்டை விழுங்கியது தெரியவந்தது. அதன் பேரில் அவரை ஸ்கேன் மையத்திற்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.

அப்போது தங்கச்சங்கிலி துண்டு முத்து முனியாண்டியின் வயிற்றில் இருப்பது தெரியவந்தது. பின்னர் மருத்துவர் உதவியுடன் (இனிமா கொடுத்து) போலீசார் நகையை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்