< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி

தினத்தந்தி
|
11 July 2023 12:13 AM IST

ராமநாதபுரம் அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது மாலங்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவரது மகள் சிறுமி யாசினி (வயது 8) அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தனது அம்மாவிடம் தின்பண்டம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அவரது தாய் 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து கடையில் தின்பண்டம் வாங்கிக் கொள்ளுமாறும் நாணயத்தை பத்திரமாக கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் ரூ.5 நாணயத்தை வாயில் போட்டபடி சிறுமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாணயத்தை சிறுமி விழுங்கியுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது தாயிடம் ஓடிவந்து நாணயத்தை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் பதறி துடித்த சிறுமியின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாணயத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் தொண்டையில் சிக்கிய நாணயம் உள்ளே சென்று விட்டது. இதனால் சிறுமியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்று பகுதியில் நாணயம் இருப்பதை கண்டறிந்தனர். நாணயத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் டாக்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிறுமிக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே சிறுமி ஒருவர் ரூ.5 நாணயத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்