சென்னை
ஆவடி அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் நடவடிக்கை
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் ஆவடியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். தையல்காரர். இவருடைய மனைவி சவுபாக்கியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இதில் இவர்களது மகளான டானியா (வயது 9), வீராபுரம் அரசினர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு 3 வயது வரை இயல்பாக இருந்த முகம், அதன் பிறகு முகத்தின் வலது பக்கம் சிறிய கரும்புள்ளி தோன்றியது. முதலில் சாதாரண ரத்தக்கட்டு என்று நினைத்த பெற்றோர், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த கரும்புள்ளி நாளடைவில் பெரிதாக ஆரம்பித்தது. கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.40 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்தும் சிறுமியின் முகத்தில் இருந்த கரும்புள்ளி மாறாமல் நாளுக்கு நாள் அதிகரித்து, டானியாவின் முகத்தில் வலது புறம் கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைய தொடங்கியது. இதனால் குழந்தையின் முக அமைப்பே மாறுபட்டது. இதனால் டானியா மட்டுமின்றி அவரது பெற்றோரும் வேதனை அடைந்தனர்.
இதுபற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மர்மநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுமி டானியா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவள், 2½ லட்சம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய நோயான முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறுமியை கவனிப்பதற்கு தனியாக டாக்டர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிறுமியின் மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர். சிகிச்சை முடிந்து ஒரு வாரத்துக்கு பிறகு டானியா வீடு திரும்புவார் என்றும், முகச் சிதைவு சிகிச்சைக்கு பிறகு அவர் பழைய நிலைக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.