சென்னை
எண்ணூர் அருகே கடலில் ராட்சத இரும்பு மிதவை கரை ஒதுங்கியதால் பரபரப்பு
|எண்ணூர் அருகே கடலில் ராட்சத இரும்பு மிதவை கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
'மாண்டஸ்' புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் தோன்றிய ராட்சத அலைகள் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள், மரங்களை சாலையில் தூக்கி வீசியது. இந்த நிலையில் நேற்று எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு ராட்சத கியாஸ் சிலிண்டர் போன்று காட்சியளிக்கும் மிதவையைப் பார்த்த பொதுமக்கள் பயந்து போய் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தெரிய வரவே ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பரமானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய ராட்சத மிதவையை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அது கப்பலின் வழிகாட்டி மிதவை என்பது தெரியவந்தது. அதாவது, நடுக்கடலில் இருந்து கப்பல்கள் கரைக்கு வரும்போது அதற்கு வழி காட்டுவதற்காக இந்த ராட்சத இரும்பு மிதவையில் சிக்னல்கள் பொறுத்தப்பட்டு, இதனை சங்கிலி மூலம் நங்கூரத்தில் கட்டி கடலில் மிதக்கவிடுவார்கள். இந்த சிக்னலை வைத்து நடுக்கடலில் இருந்து கரையை நோக்கி கப்பல்கள் வர வசதியாக இருக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.