< Back
மாநில செய்திகள்
ஓடும் சிலிண்டர் லாரியில் கேஸ் கசிவு: மும்பையிலிருந்து விரைந்து வந்த தொழில் நுட்ப நிபுணர்..!
மாநில செய்திகள்

ஓடும் சிலிண்டர் லாரியில் கேஸ் கசிவு: மும்பையிலிருந்து விரைந்து வந்த தொழில் நுட்ப நிபுணர்..!

தினத்தந்தி
|
18 July 2022 12:09 PM IST

பெருந்துறை டோல்கேட் அருகே வந்த கேஸ் டேங்கர் லாரியின் கசிவு ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.

ஈரோடு:

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து புல்லட் டைப் கேஸ் சிலிண்டர் லாரி ஒன்று மும்பையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த சிலிண்டர் லாரியில் புரொப்லைன் என்கிற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரி வாயு நிரப்பப்பட்டிருந்தது.

அது நேற்று பிற்பகல் விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே அந்த லாரி வந்த போது சிலிண்டரில் பொறுத்தப்பட்டிருந்த கேஸ் அழுத்தம் காண்பிக்கும் மீட்டரின் குழாயிலிருந்து எரி வாயு கசிந்து கொண்டிருந்தது.

இதை அவ்வழியாக வந்த பொதுமக்கள் பார்த்துவிட்டு அந்த சிலிண்டர் லாரியை ஓட்டிவந்த டிரைவரிடம் சிலிண்டர் லாரியிலிருந்து வெளியேறும் கேஸ் கசிவு குறித்து எச்சரிக்கை செய்தனர்.

இதையறிந்த அந்த லாரி டிரைவர் உஷாராகி, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக லாரியை சுங்கச் சாவடியை தாண்டி அடுத்துள்ள பொன்முடி சாலையில் கொண்டு போய் நிறுத்தினார். பின்னர் உடனடியாக பெருந்துறை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

மேற்படி தகவலின் பேரில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் லாரி சிலிண்டரில் கசிந்து கொண்டிருந்த கேஸ்ஸை தற்காலிகமாக அடைத்தனர். இதையடுத்து சிலிண்டர் லாரியில் ஏற்பட்ட கேஸ் சசிவு குறித்து லாரி டிரைவர் மும்பைக்கு தகவல் கொடுத்தார்.

மேற்படி தகவலின் பேரில் கேஸ் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப நிபுணர் ஒருவரை கேஸ் நிறுவனம் உடனடியாக விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தது. கோவை வந்த அந்த நிபுணர் பிறகு கார் மூலம் விஜயமங்கலம் சுங்கச் சாவடிக்கு நேற்று இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு அந்த நிபுணர் பொன்முடி சாலை பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் லாரியை அடைந்து தான் கொண்டு வந்திருந்த மாற்று கருவி மூலம் கேஸ் கசிவை முழுமையாக அடைத்து சரி செய்தார். அதற்கு பிறகு அந்த கேஸ் சிலிண்டர் லாரி அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.

கேஸ் கசிவு காரணமாக பாதுகாப்பு கருதி சிலிண்டர் லாரி பொன்முடி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் நேற்று பிற்பகல் முதல் நேற்றிரவு 11 மணி வரை அந்த ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப் பட்டிருந்தது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்