சேலம்
அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீ விபத்து
|காடையாம்பட்டியில் அரசு பள்ளி சமையல் கூடத்தில் நேற்று கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில், சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓமலூர்:-
காடையாம்பட்டியில் அரசு பள்ளி சமையல் கூடத்தில் நேற்று கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில், சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 222 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன.
இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணி (வயது 45) என்பவரும், சமையல் உதவியாளராக தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சாகிதா பானு (35) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அவர்கள், மாணவர்களுக்கு சத்துணவு தயாரிக்க சமையல் அறைக்கு சென்றனர். அங்கு சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து உள்ளனர். ஆனால் அந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பயந்து போன சத்துணவு அமைப்பாளர், இது குறித்து காடையாம்பட்டியில் உள்ள கியாஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீ விபத்து
இதையடுத்து அந்த நிறுவன ஊழியரான பொம்மியம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (41) என்பவர் அங்கு வந்தார். தொடர்ந்து சீனிவாசன், சத்துணவு அமைப்பாளர் கலைவாணி, சமையல் உதவியாளர் சாகிதா பானு ஆகிய 3 பேரும் சமையலறைக்குள் சென்று பார்த்தனர்.
பின்னர் சமையலறையில் ஜன்னல் அனைத்தும் மூடி இருந்த நிலையில் சீனிவாசன் கியாஸ் அடுப்பை லைட்டர் கொண்டு பற்ற வைத்ததாக தெரிகிறது. ஏற்கனவே அறை முழுவதும் கியாஸ் பரவி இருந்த நிலையில் அடுப்பை பற்ற வைத்ததும் தீப்பிடித்து பரவியது.
அப்போது அறைக்குள் இருந்த சீனிவாசன், கலைவாணி, சாகிதா பானு ஆகிய 3 பேர் உடலிலும் தீப்பற்றி பரவியது. இதில் சீனிவாசனுக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
உடனே சுதாரித்த அவர்கள் 3 பேரும் அங்கிருந்த சாக்குப்பையை எடுத்து போட்டு சிலிண்டரில் இருந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
3 பேர் படுகாயம்
அதே நேரத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் காடையாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அரசு பள்ளிக்கூட சமையல் அறையில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.