< Back
மாநில செய்திகள்
சமூக வலைதளம் மூலம் லாட்டரி விற்ற கும்பல் சிக்கியது..கோவை தனிப்படை போலீசார் அதிரடி
மாநில செய்திகள்

சமூக வலைதளம் மூலம் லாட்டரி விற்ற கும்பல் சிக்கியது..கோவை தனிப்படை போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
1 Jun 2024 1:39 PM IST

சமூக வலை தளமான வாட்ஸ்அப் மூலம் கேரள லாட்டரி விற்ற கும்பல் சிக்கியது.

கோவை,

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. அதை மீறி சிலர் கேரளா மற்றும் நாகாலாந்து லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் நம்பர் லாட்டரி விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த தனிப்படையினருக்கு ஒரு கும்பல் சமூக வலை தளமான வாட்ஸ் அப் மூலம் குழுக்கள் அமைத்து லாட்டரி விற்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிரடியாக விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் கோவை கவுண்டர் மில் பகுதியை சேர்ந்த வினோத் குமார் (வயது 39), பிரதீப் (34), வெள்ளைக்கிணறை சேர்ந்த சதீஷ்குமார் (39), நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஆதீஷ் கண்ணன் (28) என்பதும், அவர்கள் ஆன்லைன் மூலம் லாட்டரி மற்றும் 3-ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 96 எண்ணிக்கையிலான கேரளா மற்றும் நாகாலாந்து லாட்டரி சீட்டுகள், 5 மடிக்கணினி, ஒரு கார், 9 செல்போன், ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட துடியலூர் அப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த டாபர் பிரபு என்ற ஜாபர் (42) தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்