< Back
மாநில செய்திகள்
ஓட்டலை சூறையாடி விட்டு வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பல்
திருவாரூர்
மாநில செய்திகள்

ஓட்டலை சூறையாடி விட்டு வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பல்

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

மன்னார்குடியில் மாமூல் தராததால் ஆத்திரம் அடைந்த 3 பேர் கொண்ட கும்பல் வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மன்னார்குடி:

மன்னார்குடியில் மாமூல் தராததால் ஆத்திரம் அடைந்த 3 பேர் கொண்ட கும்பல் வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஓட்டல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சஞ்சீவி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்ராஜ் (வயது 52). இவர் மன்னார்குடி வ.உ.சி தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஓட்டல் கல்லாவில் வெங்கடேஷ்ராஜின் தாயார் கிருஷ்ணவேணி (76) அமர்ந்திருந்தார்.அப்போது ஓட்டலுக்கு அரிவாளுடன் 3 வாலிபர்கள் வந்தனர்.

அரிவாள் வெட்டு

அவர்கள் கல்லாவில் அமர்ந்திருந்த கிருஷ்ணவேணியிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும் கிருஷ்ணவேணியை தாக்கி ஓட்டலில் இருந்த பொருட்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து உடைத்து சூறையாடினர்.

இதை பார்த்து ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். 3 வாலிபர்களும் வாடிக்கையாளர்களை பார்த்து அரிவாளை வீசினர். இதில் ஓட்டலுக்கு உணவு வாங்க வந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அலுவலர் சம்பத்குமார் (68) என்பவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

2 பேர் படுகாயம்

இதில் படுகாயம் அடைந்த சம்பத்குமார் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜ் மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது தாயார் மற்றும் வாடிக்கையாளரை தாக்கி ஓட்டலை அடித்து உடைத்து சூறையாடியது மன்னார்குடி வ.உ.சி தெருவை சேர்ந்த விக்கி, எடத்தெருவை சேர்ந்த பிரசாத், சேரன்குளத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய 3 பேர் என தெரிவித்திருந்தார்.

வலைவீச்சு

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணவேணி மற்றும் வாடிக்கையாளர் சம்பத்குமார் ஆகியோரை தாக்கி விட்டு ஓட்டலை அடித்து உடைக்கும் காட்சி ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

மேலும் செய்திகள்