< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து 2 கைதிகளை வெட்டிய கும்பல்

தினத்தந்தி
|
18 April 2023 7:27 PM GMT

போலீசாரின் மீது மிளகாய் பொடியை வீசி, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 2 கைதிகளை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


போலீசாரின் மீது மிளகாய் பொடியை வீசி, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 2 கைதிகளை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை கைதிகள்

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலைய பகுதியில் சின்னத்தம்பி என்பவரை கொலை செய்த வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த யுவராஜ் (வயது 29), விக்னேசுவரன் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், இவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் பிரிவை சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் 2 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பர்.

அரிவாள் வெட்டு

இந்தநிலையில் நேற்று ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்மநபர்கள் 5 பேர் திடீரென யுவராஜ், விக்னேசுவரன் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் நுழைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சிலம்பரசன் கையில் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவினர்.

பின்னர் அவர்கள் யுவராஜையும், விக்னேசுவரனையும் தாக்க முயன்றனர். இருப்பினும் போலீஸ்காரர்கள் சிலம்பரசனும், அழகுராஜூம் அந்த மர்ம நபர்களை தடுக்க முயன்றனர். ஆனாலும் யுவராஜுக்கும், விக்னேசுவரனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் போலீசார் சிலம்பரசனும் காயம் அடைந்தார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் குவிப்பு

மர்மநபர்கள் 5 பேரும், திண்டுக்கல்லில் கொலையுண்ட நபரின் உறவினர்களாகவோ அல்லது கூலிப்படையினராகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேரடி விசாரணை மேற்கொண்டார். ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்