அரியலூர்
விதைகளுடன் ஆமை வடிவில் விநாயகர் சிலை செய்து அசத்தல்
|விதைகளுடன் ஆமை வடிவில் விநாயகர் சிலை செய்து அசத்தப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த கோகுலராஜாவின் மனைவி பிரியா. இவர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான வடிவில் விநாயகர் சிலையை செய்து வருகிறார். கொட்டைப்பாக்கு, நவதானியம், 36 ரூபம், பென்சில் துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகளை செய்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு கூர்ம(ஆமை) வடிவில் விநாயகரை செய்துள்ளார். அதன்மீது அட்டை, வர்ணங்கள் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறிய வடிவிலான ஆமைகள் விநாயகர் மீது ஒட்டப்பட்டுள்ளன. அந்த ஆமைகளுக்குள் வேம்பு போன்ற விதைகள் வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலையை சிலையை கரைக்கும்போது, விதைகள் வெளிப்பட்டு நீர்நிலையோரங்களில் மரங்களாக வளர்வதற்காக அந்த விதைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிரியா கூறுகையில், தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம் ஆகும். இந்த அவதாரம் மூலம் பகவான் உலகத்தை காத்து ரட்சித்தார். செல்வ வளங்களை உலகத்திற்கு அளித்தார். அதேபோல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழும் உயிரினம் ஆமை. மீனவர்கள் தங்கள் வலைகளில் ஆமைகள் சிக்கினால் மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்கள். மரம் வளர்ப்பு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது, என்றார்.