தஞ்சாவூர்
புதர்களுக்கு நடுவே செயல்படும் அங்கன்வாடி மையம்
|புதர்களுக்கு நடுவே செயல்படும் அங்கன்வாடி மையம்
தஞ்சை கீழவாசலில் புதர்களுக்கு நடுவே செயல்படும் அங்கன்வாடி மையம் விஷஜந்துக்கள் நடமாட்டத்தால் குழந்தைகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
அங்கன்வாடி மையம்
தஞ்சை கீழவாசல் பகுதி சாலைக்காரதெருவில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.2½ லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மிகுந்த பயனடைந்துவந்தனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி மைய கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.கட்டிட சுவர்களில் விரிசல்களும், மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகளும் வெளியே தெரிகிறது. அதுமட்டுமின்றி இங்குள்ள கழிப்பறை கட்டிடம் பழுதடைந்து கதவுகள் உடைந்த நிலையில் இருக்கிறது. முறையான குடிநீர் வசதியும் இல்லை.
புதர்களுக்கு நடுவே கட்டிடம்
மழைக்காலங்களில் அங்கன்வாடி மையத்துக்குள் மழைநீர் கசிந்து உள்புகுந்துவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் நனைந்து வீணாகின்றன..அதுமட்டுமின்றி அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த விஷஜந்துக்கள்அங்கன்வாடி கட்டிடத்துக்குள்ளும், சமையல் அறைக்குள்ளும் புகுந்து விடுகின்றன.
சீரமைக்க வேண்டும்
இதனால் குழந்தைகள், ஊழியர்கள் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றனர்.எனவே, குழந்தைகள் நலன் கருதி அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.