< Back
மாநில செய்திகள்
கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை - வடமாநில தொழிலாளி கைது
சென்னை
மாநில செய்திகள்

கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை - வடமாநில தொழிலாளி கைது

தினத்தந்தி
|
10 Aug 2023 6:45 AM IST

திருவொற்றியூரில் கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கிராமத்தெருவைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 53). பழ வியாபாரியான இவர், கடந்த 7-ந்தேதி இரவு பழம் வாங்க கோயம்பேடு மார்க்கெட் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு குடோன் வாசலில் அய்யம் பெருமாள் இறந்து கிடந்தார். சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரா தலைமையிலான போலீசார், அய்யம்பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அய்யம்பெருமாள் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது விலா எலும்பு முறிந்திருப்பதும் தெரிந்தது.

அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அங்கு தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் ஜா (45) என்பவர்தான் அய்யம்பெருமாளை கொசுவலை தகராறில் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

அனில்ஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை அய்யம்பெருமாள் பழம் வாங்க கோயம்பேடு செல்லாமல் அனில்ஜா பயன்படுத்தும் கொசுவலையை எடுத்து போர்த்திக்கொண்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியில் தூங்கி உள்ளார். இதைப்பார்த்த அனில்ஜா, கொசுவலையை எடுத்தது தொடர்பாக அய்யம்பெருமாளிடம் மோதலில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவரை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அய்யம்பெருமாள் இறந்து போனதால் பயந்து போன அனில்ஜா ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் இந்த கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என கைதான அனில்ஜாவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்