விபத்தில் உயிரிழந்த நண்பர்.. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
|சிவா உயிரிழந்தது முதல் மாணவி அனிதா சரியாக சாப்பிடாமல் சோகத்தில் இருந்துள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்திநகர் கல்லேரிபகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 16). குடியாத்தம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது உறவினர் மகன் சிவா. இருவரும் நட்பாக பழகி வந்துள்ளன்ர். இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி ஏற்பட்ட விபத்தில் சிவா இறந்ததாக கூறப்படுகிறது.
சிவா உயிரிழந்தது முதல் மாணவி அனிதா சரியாக சாப்பிடாமல், எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தாமல் சோகத்தில் இருந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில் 24-ந்தேதி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக அனிதா வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் பல இடங்களில் அவரை தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குடியாத்தம்-காட்பாடிரோடு காந்திநகரில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து அனிதாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. விசாரணையில் மாணவி அனிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.