< Back
மாநில செய்திகள்
மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை
சென்னை
மாநில செய்திகள்

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை

தினத்தந்தி
|
3 July 2023 7:12 AM GMT

மது குடிக்க 10 ரூபாய் கொடுக்க மறுத்ததால் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மீனவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லைப்போட்டு கொலை

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 35). மீனவரான இவர், மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று காலை நெட்டுக்குப்பம் கடற்கரையில் ரஞ்சித் பிணமாக கிடந்தார். அவர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற மீனவர்கள், எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மீனவர் கைது

மேலும் விசாரணையில் உலகநாதபுரத்தை சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் (58) என்பவர் குடிபோதை தகராறில் ரஞ்சித்தை தாக்கி, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கொலையான ரஞ்சித்தும், கைதான கோவிந்தராஜிம் நண்பர்களாக சுற்றி வந்தனர். குடிபோதைக்கு அடிமையான இருவரும் அடிக்கடி ஒன்றாக மதுகுடிப்பது வழக்கம். எப்போதாவது ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை முதல் அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி மது குடித்தனர்.

10 ரூபாய் தராததால் ஆத்திரம்

இந்த நிலையில் இரவு மதுபோதையில் இருந்த கோவிந்தராஜ், மேலும் மதுகுடிப்பதற்காக ரஞ்சித்திடம் 10 ரூபாய் தரும்படி கேட்டார். ஆனால் ரஞ்சித் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. ஏற்கனவே வேலை செய்தபோது கோவிந்தராஜுக்கு ரஞ்சித் பணம் கொடுக்க வேண்டும் என தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கோவிந்தராஜ், இரவில் நெட்டுக்குப்பம் கடற்கரையில் படுத்து இருந்த ரஞ்சித்தின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

குடிபோதையில் 10 ரூபாய் தரமறுத்த ஆத்திரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்