< Back
மாநில செய்திகள்
ஆசிரியையின் மகள் திருமணத்தில் 10 பவுன் நகை அபேஸ் செய்த முன்னாள் மாணவி
மாநில செய்திகள்

ஆசிரியையின் மகள் திருமணத்தில் 10 பவுன் நகை அபேஸ் செய்த முன்னாள் மாணவி

தினத்தந்தி
|
8 April 2024 10:23 AM IST

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்தபோது 10 பவுன் நகையை திருடியவர் சிக்கினார்.

திருவட்டார்,

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளின் திருமணம் அழகியமண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. பின்னர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விருந்து உபசரணை நடைபெற்றது. இதற்காக ஆலயத்தில் இருந்து திருமண மண்டபத்துக்கு வந்த மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றார்.

அவருக்கு பனச்சமூடு அருகே அழகுநிலையம் நடத்தி வரும் பெண் அழகு கலைஞர் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அந்த பெண் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அவர் அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது மணப்பெண்ணின் ஒரு தங்க சங்கிலியில் உள்ள கொக்கியை இணைக்க முடியவில்லை. உடனே அருகில் நின்ற மணப்பெண்ணின் சகோதரி தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை கழற்றி அதில் உள்ள கொக்கியை மணமகளின் நகையில் இணைத்தார். பின்னர் சகோதரியின் நகையை அருகில் இருந்த மேஜை மீது வைத்தார். அலங்காரம் முடிந்ததும் மணப்பெண்ணும், உறவினர்களும் அவசரம் அவசரமாக மேடைக்கு சென்றனர்.

தொடர்ந்து கேக் வெட்டும் சடங்கு, விருந்து உபசரணை முடிந்த பின்பு வீடுகளுக்கு சென்றனர். மாலை 3 மணிக்கு மணப்பெண்ணின் சகோதரிக்கு மண்டபத்தில் தான் கழற்றி வைத்த 10 பவுன் நகை நினைவுக்கு வந்தது. உடனே அவர் மண்டபத்துக்கு வந்து நகையை தேடினார். ஆனால் அங்கு நகையை காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மணப்பெண்ணுடன் கடைசி வரை பெண் அழகு கலைஞர்தான் இருந்தார். இதனால் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நகையை குறித்து கேட்டனர். அப்போது அவர் நகையை பார்க்கவில்லை என்று கூறினார்.

ஆனால் அவர்தான் நகையை எடுத்திருக்க வேண்டும் என தலைமை ஆசிரியையின் குடும்பத்தினர் உறுதியாக நம்பினர். எனவே அவர்கள் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி, ஏட்டு சுபின் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக பெண் அழகு கலைஞரை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். முதலில் அவர் நகையை எடுக்கவில்லை என கூறினார். தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் நகையை எடுத்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன் நகையை தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று நகையை மீட்டு மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் அந்த பெண் அழகு கலைஞர் போலீஸ் நிலையத்துக்கு கணவருடன் வந்து தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டு எழுதிக்கொடுத்தார். அத்துடன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையும் நகை திருப்பிக்கிடைத்ததால் புகார் மீது நடவடிக்கை தேவை இல்லை என எழுதிக் கொடுத்தார்.

நகையை அபேஸ் செய்த பெண் அழகு கலைஞர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்