< Back
மாநில செய்திகள்
பலத்த காயத்துடன் நடுக்கடலில் உயிருக்கு போராடிய வெளிநாட்டுக்காரர் - குமரி கடலில் அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

பலத்த காயத்துடன் நடுக்கடலில் உயிருக்கு போராடிய வெளிநாட்டுக்காரர் - குமரி கடலில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
5 Jun 2022 7:55 AM IST

கடல் பகுதியில் படகில் காயத்துடன் பரிதவித்த வெளிநாட்டை சேர்ந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தினர்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள இரையுமன்துறை கடற்கரை பகுதியில் கரையில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் நேற்று மாலையில் ஒரு வெளிநாட்டு மர்ம படகு நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்தது. அந்த படகு ஒரே இடத்தில் வெகுநேரமாக நிற்பதை கண்ட அந்த பகுதி மக்கள் கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியில் உள்ள இந்திய கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் கடற்படையினர் இரையுமன்துறை பகுதிக்கு கப்பலில் வந்தனர். பின்னர் சிறிய படகு மூலம் வெளிநாட்டு படகின் அருகில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த படகில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் இருந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டு இருந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜெரோயின் என்பது தெரிய வந்தது. இவர் படகு ஓட்டுனர் பயிற்சியாளராக உள்ளார். மேலும் அடிக்கடி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து அங்குள்ள நபர்களுக்கு படகு ஓட்டுதல் பயிற்சி வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தற்போது படகில் வந்து கொண்டிருந்த போது கயிறு காலில் சுற்றி காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருக்கும் துறைமுகத்தில் கரை ஒதுங்கி சிகிச்சை பெற தேங்காப்பட்டணம் நோக்கி வந்துள்ளார். ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரை ஒதுங்க முடியாமல் நங்கூரமிட்டு நின்றதாக கூறினார்.

இதனையடுத்து அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கடற்படையினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதையடுத்து அந்த நபர் அதே படகில் கடலில் நங்கூரமிட்டு கரை திரும்ப முடியாமலும், வந்த இடத்திற்கு திரும்ப செல்ல முடியாமலும் பரிதவித்து வருகிறார். படகில் இருக்கும் நபர் மீது சந்தேகம் கொண்ட கடலோர காவல்படையினர் தேங்காப்பட்டணம், இரையுமன்துறை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்