நாகப்பட்டினம்
திடீரென இடிந்து விழுந்த தரைப்பாலம்
|திருமருகல் அருகே தரைப்பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே தரைப்பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தரைப்பாலம்
திருமருகலில் இருந்து மானாம்பேட்டை செல்லும் சாலையில் மேலவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மேலவாய்க்கால் மூலம் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
முடிக்கொண்டான் ஆற்றில் இருந்து மேலவாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வாய்க்காலின் கரைகளை தொட்டுக்கொண்டு தண்ணீர் சென்றது.
இடிந்து விழுந்தது
இந்தநிலையில் மேலவாய்க்காலில் உள்ள தரைப்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெரியமணி, இந்திரா அருள்மணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு தடை
பின்னர் இந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் மாற்றிவிடப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.