காஞ்சிபுரம்
பள்ளியில் திடீர் தீ விபத்து
|பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகி்றது.
இந்த பள்ளியில் 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் அந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது ஞாயிற்றுக்கிழமை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையில் பள்ளிகள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் ஆயுத பூஜை தினத்தன்று பள்ளியில் யாரும் இல்லாத நிலையில் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கரும்புகை எழுந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உடனடியாக காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த ஷூ, புத்தகங்கள் உள்ளிட்டவைகள் இந்த தீ விபத்தினால் சேதமடைந்தன. மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா என சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.