சென்னை
அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
|அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அரும்பாக்கம், லட்சுமி அம்மாள் தெருவில் உள்ள மனோகர் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வாலிபர்கள் தங்குவதற்காக அறைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்தனர்.
நேற்று இரவு இங்குள்ள ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இதுபற்றி தகவல்அறிந்துவந்த அண்ணா நகர், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உயரமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் எழும்பூரில் இருந்து ராட்சத ஏணியுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் 3-வது மாடியில் இருந்த அனைத்து அறைகளும் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.