சென்னை
மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பேட்டரி வெடித்து தீ விபத்து
|சென்னை சவுகார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் அக்சய் (வயது 25). இவர் பேப்பர் மில் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை கடை நடத்தி வருகிறார். குறிப்பாக பேட்டரி வாகனங்களை விற்று வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பேட்டரி சார்ஜ் போட்ட போது அது வெடித்து கரும்புகை வெளியேறியது. அதைத் தொடர்ந்து மற்ற வாகனங்களுக்கும் பேட்டரிக்கும் தீ பரவி ஷோரூம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பணியாளர்களை மீட்டு இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த செம்பியம் கொளத்தூர் வியாசர்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முன்னதாக கடைக்குள் செல்ல முடியாததால் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.