சென்னை
செங்குன்றத்தில் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; கம்ப்யூட்டர், ஆவணங்கள் எரிந்து சாம்பல்
|செங்குன்றத்தில் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்தில் கம்ப்யூட்டர், ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.
செங்குன்றம் காமராஜர் நகர் பைபாஸ் சாலை அருகே மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குதான் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் ஊழியர்கள், அலுவலகத்தை பூட்டிச்சென்றனர்.
இந்த மின்வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் இருந்த அறையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி, இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்குன்றம், அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி மின்வாரிய அலுவலகத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
எனினும் அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. மற்ற அறைகளுக்கு தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? இல்லை வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.