காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் மின்சார வாகனங்கள் பழுது நீக்கும் நிலையத்தில் தீ விபத்து
|காஞ்சீபுரத்தில் மின்சார இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
மின்சார வாகனம்பழுது நீக்கும் நிலையம்
காஞ்சீபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவருக்கு சொந்தமான மின்சார இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல் பழுது நீக்கும் நிலையத்தை மூடிவிட்டு வெங்கட்ராமன் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் சென்றவுடன் திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை உண்டாகி தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயில் எரிந்து நாசம்
ஆனால் அதற்குள் மள, மளவென பரவிய தீயால் சர்வீஸ் நிலையம் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இரு சக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பேட்டரிகள் எரிந்து நாசமானது. மின்சார வாகனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாகங்களால் ஆனது என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான மின்சார இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகி எலும்பு கூடு போல் காட்சியளித்தது. இந்த தீ விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.