பழனி அருகே தனியார் பேப்பர் ஆலையில் தீ விபத்து
|பழனி அருகே தனியார் பேப்பர் ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் தனியார் பேப்பர் ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பேப்பர் உற்பத்திக்காக ஆலை வளாக பகுதியில் பல டன் பழைய பேப்பர் கொட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று வளாக பகுதியில் வைத்திருந்த பேப்பரில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக ஆலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.மேலும் தண்ணீரை ஊற்றி தீணை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
மேலும் பேப்பரில் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவியது. இதையடுத்து ஆலை நிர்வாகத்தினர் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
எனினும் அங்கிருந்த பல டன் பழைய பேப்பர் எரிந்து நாசமானது.