ராமநாதபுரம்
வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
|வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொண்டி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த 5-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் தொண்டீஸ்வரனுக்கு பேரூராட்சி மன்றத்தின் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தொண்டி பேரூராட்சியில் தமிழக அரசின் அரசாணை படி வணிக நிறுவனங்களில் வியாபாரிகள் பிளாஸ்டிக் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தொண்டி பேரூராட்சியை பசுமை நகரமாக மாற்றும் வண்ணம் வணிக நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் பேரூராட்சி மூலம் ரூபாய் 1000 முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் அதனை முறைப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.