< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிப்பு
|14 July 2022 7:58 AM IST
சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாநகராட்சி குழுக்களின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 500-ம், அண்ணாநகரில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரமும், ராயபுரத்தில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.