செங்கல்பட்டு
யூடியூப் பிரபலம் சென்ற கார் மோதி பல்கலைக்கழக பெண் காவலாளி பலி
|யூடியூப் பிரபலம் சென்ற கார் மோதி பல்கலைக்கழக பெண் காவலாளி பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 55), இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மறைமலைநகரில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பத்மாவதி மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அசாருதீனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல யூடியூபருக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் போது காரில் யூடியூபர் இருந்தாரா? அல்லது காரை டிரைவர் மட்டும் ஓட்டி வந்தாரா? என்பது குறித்து பரனூர் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.