< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலி
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலி

தினத்தந்தி
|
19 Oct 2022 2:40 PM IST

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலியானார்.

சென்னை கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் கீர்த்தனா (22). பழைய மாமல்லபுரம் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு செல்வதற்காக கீர்த்தனா தந்தை மணிவண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் மாம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தார். வண்டியை அவரது தந்தை ஓட்டிச் சென்றார்.

பொன்மார் பகுதியில் செல்லும்போது அதே மார்க்கத்தில் பின்னால் கட்டுமான கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரெய்லர் லாரியின் டிரைவர் 'ஹார்ன்' அடித்ததால் மணிவண்ணன் மோட்டார் சைக்கிளில் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையின் வலது புறத்தில் 2 பேரும் விழுந்துள்ளனர். இதில் கீர்த்தனா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிவண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீர்த்தனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்