< Back
மாநில செய்திகள்
தட்டிக்கேட்ட மாணவனை பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவன்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தட்டிக்கேட்ட மாணவனை பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவன்

தினத்தந்தி
|
24 Feb 2023 1:00 AM IST

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவன், சக மாணவனை பிளேடால் கழுத்தை அறுத்தார்.

கிருஷ்ணகிரியில் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காதல் தொல்லை

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் சின்ன திருப்பதி (வயது 20). சின்ன மட்டாரப்பள்ளியை சேர்ந்தவர். இவரது தங்கை உறவுமுறை கொண்ட உறவுக்கார பெண், இதே கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படிக்கும் செட்டியம்பட்டியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (20) என்ற மாணவர் காதலிப்பதாக கூறி காதல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுகுறித்து மாணவி தனது வீட்டில் கூறினார். இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பிலும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று கல்லூரியில் லிங்கேஸ்வரனிடம், மாணவியின் உறவுக்காரரும், சக மாணவருமான சின்ன திருப்பதி இந்த பிரச்சினை குறித்து கேட்பதற்காக சென்றார்.

பிளேடால் கழுத்து அறுப்பு

அந்த நேரம் லிங்கேஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சின்ன திருப்பதியின் கழுத்தை அறுத்து விட்டு ஓடினார். கழுத்து அறுபட்ட நிலையில், படுகாயமடைந்த சின்ன திருப்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரிக்குள் வெளி நபர்கள், சிலர் மாணவர்கள் போர்வையில் உள்ளே வருவதாகவும், அவர்களை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி கல்லூரியில் மாணவரை சக மாணவர் பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்