< Back
மாநில செய்திகள்
திருவட்டார் அருகே62 கிலோ ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்த விவசாயி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

திருவட்டார் அருகே62 கிலோ ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்த விவசாயி

தினத்தந்தி
|
19 Dec 2022 3:13 AM IST

திருவட்டார் அருகே விவசாயி ஒருவர் தோட்டத்தில் 62 கிலோவில் ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்தார். இது உலக சாதனை என அவர் தெரிவித்தார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே விவசாயி ஒருவர் தோட்டத்தில் 62 கிலோவில் ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்தார். இது உலக சாதனை என அவர் தெரிவித்தார்.

விவசாயி

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது 72). இவர் திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தனது தோட்டத்தில் சேனைக்கிழங்கு, கூவைக்கிழங்கு, சேம்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடத் தொடங்கினார். அதன்படி அந்த ஆளுயர இலை பரப்பி வளர்ந்த சேனைக்கிழங்கு செடிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்டது. அந்த செடிகளில் இருந்து அறுவடை செய்தபோது நான்கு சேனைக்கிழங்குகள் பிரமாண்டமான அளவில் இருப்பதை கண்டு பூரிப்படைந்தார். அவற்றை எடை போட்டபோது 61.700 கிலோ, 55.900 கிலோ, 37 கிலோ, 29 கிலோ எடை கொண்டவைகளாக இருந்தது. அதிகபட்ச எடை கொண்டது 61.700 கிலோ ஆகும்.

சாதனை முறியடிக்க...

இதுகுறித்து வில்சன் கூறுகையில், "நான் அரசு வேலையில் இருக்கும்போதே விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பேன். என்னுடைய வீட்டைச்சுற்றி தென்னை, வாழை, நல்லமிளகு, இஞ்சி, கூவைக்கிழங்கு, சீனிக்கிழங்கு ஆகியவை பயிரிட்டுள்ளேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர விவசாயி ஆகிவிட்டேன். இயற்கை விவசாயத்தில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. பொதுவாக சேனைக்கிழங்கு 5 முதல் 10, 12 கிலோ எடை கொண்டவையாக இருக்கும்.

கடந்த ஆண்டு இந்திய சாதனைப்புத்தகத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவர் 56.100 கிலோ எடை கொண்ட சேனையை அறுவடை செய்த தகவல் வெளியானது. அதை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு நான் சேனைக்கிழங்கு பயிரிட்டேன்.

இயற்கை உரங்கள்

சேனைக்கிழங்கு பொதுவாக பத்து மாத பயிர். பங்குனி மாதம் பயிர் செய்து கார்த்திகையில் அறுவடை செய்வார்கள். நான் சேனை மற்றும் என்னுடைய தோட்டப்பயிர்களுக்கு இலை தழை, மாட்டுச்சாணி, ஆட்டுப்புழுக்கை, கோழிக்காரம் ஆகிய இயற்கையான உரங்களை மட்டுமே வைப்பேன். தண்ணீர் தவறாமல் பாய்ச்சுவேன். மேலும், அருகில் குளம் இருப்பதால் எப்போதும் ஈரப்பதமாகவே எனது தோட்டம் இருக்கும். இப்போது 61.700 எடையில் சேனைக்கிழங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஆண்டில் 75 கிலோ எடை கொண்ட சேனையை விளைவிப்பேன்" என்றார்.

இந்த பிரமாண்ட எடை கொண்ட சேனைக்கிழங்குகளை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிசயமாக பார்த்துச்் செல்கின்றனர்.

மேலும் செய்திகள்