< Back
மாநில செய்திகள்
மதுபோதையில் தகராறு செய்த விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மதுபோதையில் தகராறு செய்த விவசாயி சரமாரி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
24 Aug 2023 4:15 AM IST

பழனி அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயி அரிவாளால் வெட்டி கொலை. மனைவியை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கொலை

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடபருத்தியூரை சேர்ந்தவர் நாட்டுத்துரை (வயது 73). விவசாயி. இவருக்கு கருப்பாத்தாள் (60) என்ற மனைவியும், கார்த்திகா (17) என்ற மகளும் உள்ளனர். மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் நாட்டுத்துரை கருப்பாத்தாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரே வீட்டிலேயே இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாட்டுத்துரை கருப்பாத்தாளிடம் தகராறு செய்தார்.

அப்போது மகள் கார்த்திகா, இருவரையும் விலக்கிவிட்டார். ஆனாலும் நாட்டுத்துரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவன் என்றும் பாராமல் நாட்டுத்துரையை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மனைவி கைது

இதற்கிடையே சத்தம் கேட்டு நாட்டுத்துரையின் வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து கீரனூர் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நாட்டுத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினையில் கருப்பாத்தாள், நாட்டுத்துரையை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாத்தாளை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். கணவரை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் கீரனூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்