திருப்பத்தூர்
வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
|திருப்பத்தூர் அருகே நாச்சியார் குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்
கஞ்சா செடி வளர்ப்பு
திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 62). இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குந்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு வருகிறார். இந்த வாழைத் தோப்பு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜனின் வாழைத் தோப்பிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
விவசாயி கைது
அப்போது வாழை தோப்பின் நடுவில் ராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்தனர். இதன் எடை 2½ கிலோ ஆகும்.
இதுகுறித்து ராமன் மீது குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.