பெரம்பலூர்
விபத்தை தடுக்க வைத்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
|விபத்தை தடுக்க வைத்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
விவசாயி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 37). விவசாயி. இவர் கடந்த 12-ந் தேதி மாலை அரியலூர்-கொளக்காநத்தம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். முன்னதாக அந்த சாலையில் கூடலூர் பிரிவு சாலை அருகே கடந்த 10-ந் தேதி மரக்கிைள முறிந்து கீழே விழுந்து கிடந்தது. இதையடுத்து விபத்து ஏற்படுவதை தடுக்க மரக்கிளையை சுற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கற்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில் முத்துசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், மரக்கிளையை சுற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு கல் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துசாமி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறியல்
இதையடுத்து சாலையில் விழுந்த மரக்கிளையை உடனடியாக அகற்றாமல், அதனை சுற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கற்களை வைத்ததால் தான் விபத்தில் சிக்கி முத்துசாமி உயிரிழந்தார் என்று உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக்கோரியும், முத்துசாமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் முத்துசாமியின் உறவினர்கள் நேற்று காலை இலுப்பைக்குடி பஸ் நிறுத்தம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
விபத்தில் இறந்த முத்துசாமிக்கு சந்தோசம் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.