திருவள்ளூர்
திருத்தணி அருகே லாரி மோதி விவசாயி சாவு
|திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த விவசாயி லாரி மோதி பரிதாபமாக பலியானார்.
ஆந்திர மாநிலம், புத்தூர் அடுத்த எஸ்.பி.ஆர்.புரம் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பராம ராஜூ (வயது 52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்தவரான தனது நண்பர் கேசவலு (50) என்பவருடன் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு வந்துக்கொண்டிருந்தனர்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பைபாஸ் ரவுன்டான அருகில் உள்ள ஆசிரியர் நகர் அருகே வந்தபோது முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி எதிர்பாராதவிதமாக சுப்பராம ராஜூ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சுப்பராம ராஜூ லாரி டயரில் சிக்கி பலியானார். கேசவுலு சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மேத்தா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அவரது மனைவியும் பத்மாவதியும் (வயது 48) பின்னால் அமர்ந்து சென்றார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியை கடந்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரம் ஏறிய நிலையில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் வெங்கடேசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.