விருதுநகர்
அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
|கோவில் விழாவுக்காக சாலையில் அமைத்த அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பலியானார். அவருடைய மனைவி தப்பினார்.
தாயில்பட்டி,
அலங்கார வளைவு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 54). விவசாயி. இவருடைய மனைவி கருப்பாயம்மாள் (50). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்.
எனவே ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக மனைவியுடன் மணிமுத்து, விஜயகரிசல்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெம்பக்கோட்டைக்கு சென்று கொண்டு இருந்தார். செல்லும் வழியில் துர்க்கை அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழாவுக்காக சிவகாசி-சங்கரன்கோவில் ரோட்டில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு வந்தது. ஆனால், முழுமையாக அதற்கான பணி முடிக்கப்படாமல் இருந்தது. அந்த அலங்கார வளைவில் ஒரு கம்பு சற்று நீண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வழியாக மணிமுத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக அந்த கம்பில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் மனைவியும் அவரும் கீழே விழுந்தனர்.
பரிதாப சாவு
இதில் மணிமுத்து பலத்த காயம் அடைந்தார். அவரது மனைவி கருப்பாயம்மாள் லேசான காயத்துடன் தப்பினார்.
விபரீதத்தை அறிந்த அந்த வழியாக வந்தவர்களும்,, அக்கம்பக்கத்தினரும் மணிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்தசம்பவம் குறித்து மணிமுத்து மகன் முத்தீசுவரன் (23) வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் விசாரணை நடத்தினார். பந்தல் அமைப்பாளர் வெம்பக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகசாமி (42), கோவில் விழா நிர்வாகி ஏமராஜ் (70) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்துக்கு காரணமான அலங்கார வளைவு உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் விஜயகரிசல்குளத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.