வெளியூர் சென்ற மனைவி: வீட்டில் நடந்த மது விருந்து.. குத்திக்கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை
|தக்கலை அருகே வீட்டில் நடந்த மது விருந்தில் புதுமாப்பிள்ளை குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்தவர் மகேஷ்(38). இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே திருமணமான இவர், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சென்னையை சேர்ந்த ஷோபி (36) என்பவர் 2-வதாக திருமணம் செய்தார். ஷோபிக்கும் இது 2-வது திருமணமாகும். மஸ்கட்டில் அழகு கலைஞராக வேலை பார்த்த ஷோபியுடன், விமானத்தில் ஏற்பட்ட பழக்கம் மூலம், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மகேஷ் திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் 2 பேரும் தக்கலை அருகே உள்ள வட்டம் அண்ணாநகரில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியேறினர். இதற்கிடையே கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஷோபி மட்டும் சென்னையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டில் மகேஷ் மட்டும் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் மகேஷின் அக்காள் மகன் அவரை செல்போனில் அழைத்தார். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் அக்காள் மகன் காலை 11 மணிக்கு மகேஷ் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மகேஷ் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து உறவினர்களுக்கும், தக்கலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது மனைவி சென்னைக்கு சென்ற பின்பு வீட்டில் தனியாக இருந்த மகேஷ் நேற்று முன்தினம் இரவு சிலரை தனது வீட்டுக்கு வரவழைத்து மதுவிருந்து வைத்துள்ளார். அங்கு அனைவரும் உற்சாகமாக மது குடித்து கொண்டிருந்தனர். போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து மகேஷை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட மகேசுக்கு கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. மகேசுடன் மதுகுடித்தவர்கள் அவருடைய நண்பர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் ரீதியில் போலீசாரின் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.