சென்னை
புழுதிவாக்கத்தில் குடிபோதையில் பள்ளி வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவர்; 2 மாணவர்கள் காயம்
|புழுதிவாக்கத்தில் குடிபோதையில் பள்ளி வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவரால் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
சென்னையை அடுத்த புழுதிவாக்கம் இந்து காலனி 2-வது பிரதான சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வேன் டிரைவராக ஜெயவேல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர், பள்ளி மாணவர்கள் 16 பேரை வேனில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதினார். இதனால் வேனில் இருந்த மாணவர்கள் அலறினார்கள். இதில் 2 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது பற்றி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
அதைகேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், வேன் டிரைவரிடம் சண்டை போட்டனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் எப்படி குடிபோதையில் உள்ளவரை வேலைக்கு அமர்த்தலாம்? என கேட்டு வாக்குவாதம் செய்தனர். உடனடியாக டிரைவரை வேலையில் இருந்து நிறுத்தி விடுவதாக பள்ளி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் ஜெயவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.