< Back
மாநில செய்திகள்
பக்கத்து வீட்டுக்காரருடன் குடிபோதையில் வாக்குவாதம் தகராறை தடுக்க வந்த தந்தையை வெட்டிக்கொன்ற பெயிண்டர்
சென்னை
மாநில செய்திகள்

பக்கத்து வீட்டுக்காரருடன் குடிபோதையில் வாக்குவாதம் தகராறை தடுக்க வந்த தந்தையை வெட்டிக்கொன்ற பெயிண்டர்

தினத்தந்தி
|
13 July 2023 12:57 PM IST

பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறை தடுக்க வந்த தந்தையை வெட்டிக்கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் குமார் (40). இவர், பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார்.

குடிபோதைக்கு அடிமையான குமார், தினமும் குடித்துவிட்டு வந்து தந்தை வீரமுத்துவிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் அந்த தெருவில் வேகமாக வந்தார்.

அப்போது சாலையின் குறுக்கே வந்த பூனை மீது மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. இதனை பார்த்த அவரது பக்கத்து வீட்டுக்காரரான வேலன், மோட்டார்சைக்கிளில் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்? என்று குமாரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த குமாரின் தந்தை வீரமுத்து அங்கு வந்தார். வேலனிடம் தகராறு செய்த தனது மகன் குமாரை, "குடிபோதையில் இப்படி தகராறு பண்ணாதே?" என தடுத்தார். ஆனால் தந்தை தடுத்தும் கண்டுகொள்ளாத குமார், தொடர்ந்து வேலனிடம் தகராறு செய்தார்.

மேலும் ஆத்திரம் அடைந்த குமார், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் வேலனை வெட்ட முயன்றார். அப்போது குறுக்கே வந்த தனது தந்தை வீரமுத்துவின் கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த வீரமுத்து, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

மேலும் போதையில் இருந்த குமார் நிலை தடுமாறி கீழே கிடந்த கல்லில் விழுந்து விட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் கொலையான வீரமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலையில் படுகாயம் அடைந்த குமாரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறை தடுக்க வந்த தந்தையை பெற்ற மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்