சென்னை
வளசரவாக்கத்தில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
|வளசரவாக்கத்தில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் கடைகளுக்குள்ளும் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து வீணாக வெளியேறிய குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரங்களில் உள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளானார்கள்.
சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதியில் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடி சென்றன. வாகன நெரிசலை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.