நடித்து கொண்டிருந்த போதே உயிரிழந்த நாடக கலைஞர் - சோகத்தில் மூழ்கிய கிராமம்
|சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டு இருந்தபோதே கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வருடம் தோறும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம்.
இந்த நாடகத்தில் அதே ஊரைச் சேர்ந்த ராஐய்யன் (வயது 62) என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கு மேற்பட்ட துணை நடிகர்களும் நடிப்பார் கள்மேலும் இந்த நாடகத்தில் நரசிம்மன்வேடத்திலும் நாரதர் வேடத்திலும் இவரே நடிப்பார். இவர் பாடலையும் நடிப்பையும் பலரும் ரசித்துக்கொண்டிருப்பதால் பல வருடங்களாக இந்த நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்யா நாடகம் 5 நாட்கள் நடைபெறும். கடைசி நாளான நேற்று இரவு வழக்கம் போல நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலை ஏழு மணிக்கு முடியும்.
இதைத் தொடர்ந்து நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் ராஜய்யா அதிகாலை 3 மணிக்கு ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடிக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். பாடிக்கொண்டே இருந்தவர் அப்போது திடீரென்று ஒரு இடத்தில் நின்று விட்டார். நின்ற அவர் சில வினாடிகளில் அப்படியே சரிந்து கீழே விழுந்துவிட்டார்.
உடனே அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் அவரை தூக்கி பார்த்தபோது மயக்க நிலையில் இருப்பதாக உடனடியாக சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்கள்.
அப்போது அங்கிருந்து மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக கூறவே மீண்டும் குப்பம் துறைக்கு எடுத்துவரப்பட்டது குப்பன் துறையில் அவருடைய இல்லத்தில் அவருடைய பிரேதம் வைக்கப்பட்டுள்ளது.
அவருடைய உடலுக்கு ஆண்களும் பெண்களுமாக குப்பந்துறை மற்றும் உக்கரும் ஊராட்சியில் உள்ள ஏராளமான பேர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவருக்கு நீலாவதி (59) என்ற மனைவி இருக்கிறார்.