< Back
மாநில செய்திகள்
எஜமானி உடலுடன் சுடுகாடு வரை சென்று பாச போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்
மாநில செய்திகள்

எஜமானி உடலுடன் சுடுகாடு வரை சென்று பாச போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்

தினத்தந்தி
|
24 Jan 2024 8:53 AM IST

இறந்த எஜமானி உடலை வாகனத்தில் ஏற்றும்போது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள சிம்மதீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி (வயது 85). பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது குஜராத்துக்கு குடிபெயர்ந்தார். பின்னர் மும்பையில் ஆசிரியையாக பணியாற்றினார். அதன்பின் தனது உறவினருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை வந்த இவர் இங்குள்ள சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தார். இறுதி வரை தாராகவுரி திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர் நோபு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாயை பாசத்துடன் குழந்தையைபோல் வளர்த்து வந்தார். இந்த நிலையில் தாராகவுரி நேற்று முன்தினம் காலையில் வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அடக்கம் செய்ய யாரும் இல்லாத நிலையிலும், சடங்கு முறைகள் தெரியாததாலும் உடன் வசித்த உறவினர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகரான மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்று அவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தார்.

இந்த நிகழ்வின்போது தாராகவுரியை விட்டுப் பிரிய மனமில்லாமல் வளர்ப்பு நாய் அவரின் உடலை சுற்றி சுற்றி வந்தது. மேலும் உடல் மீது படுத்துக்கொண்டு, அவரை எழுப்ப முயன்றது. தகனம் செய்ய உடலை கொண்டு செல்ல முற்பட்டபோது உடலை எடுக்கவிடவில்லை. தொடர்ந்து உடலை வாகனத்தில் ஏற்றும்போது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது. அப்போதும் அந்த பெண்ணின் உடலை சுற்றி வாலை ஆட்டிக்கொண்டே தவித்தது. இதையடுத்து அவரின் உடல் எமலிங்கம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

பெற்ற தாய்-தந்தையரையே விரட்டிவிடும் இந்த காலத்தில் வளர்ப்பு நாய் தன்னை பாசத்துடன் வளர்த்த எஜமானி இறந்த நிலையில் அவரை பிரிய முடியாமல் உடலை சுற்றி சுற்றி வந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்