சென்னை
அதிக விலைக்கு மதுபானம் விற்றதால் தகராறு; பாட்டிலை உடைத்து பார் ஊழியரின் கழுத்தில் குத்திய வாலிபர்கள்
|சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அதிக விலைக்கு மதுபானம் விற்றதால் ஏற்பட்ட தகராறில் பாட்டிலை உடைத்து பார் ஊழியரின் கழுத்தில் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பல்லாவரம் திருநீர்மலை சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு சட்டவிரோதமாக செயல்படும் பாரில் 24 மணி நேரமும் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைகள் மூடிய பிறகு இங்குள்ள பாருக்கு நாகல்கேணியை சேர்ந்த கார்த்திக் (வயது 25), கதிர்(25) ஆகியோர் சென்று மதுபானம் கேட்டனர்.
பார் ஊழியரான நாகல்கேணியை சேர்ந்த நந்தகோபால்(40) மதுபானத்துக்கு கூடுதல் விலை கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் கதிர் இருவரும் மதுபாட்டிலை உடைத்து நந்தகோபாலின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த நந்தகோபால் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கழுத்தில் 21 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கதிரை தேடி வருகின்றனர்.
இதேபோல் சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்த விக்னேஷ்(26) தன்னுடைய நண்பரான புழல் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த டில்லி பாபு(26) என்பவருடன் சேர்ந்து ராஜமங்கலம் செந்தில் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த டில்லிபாபு கையில் இருந்த மதுபாட்டிலை விக்னேஷின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த அவர், கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லிபாபுவை கைது செய்தனர்.