திருச்சி
புரோட்டாவிற்கு பதிலாக ஆப் பாயில் கொடுத்ததால் ஓட்டலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு
|புரோட்டாவிற்கு பதிலாக ஆப் பாயில் கொடுத்ததால் ஓட்டலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முசிறி:
தாக்குதல்
கடலூர் அகரம் ஆலம்பட்டி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன்(வயது 47). இவர் சம்பவத்தன்று முசிறி பகுதியில் சேலம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக தன்னுடன் வந்த பாக்கியராஜ், ராமராஜ், சுவாமிநாதன், சதீஷ்குமார் ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு புரோட்டா கொண்டு வருமாறு கூறி, வெகு நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.
அப்போது அந்த கடையின் ஊழியர் புரோட்டாவிற்கு பதிலாக ஆப்பாயிைல கொண்டு வந்து வைத்துவிட்டு, சாப்பிடுமாறு கூறியுள்ளார். புரோட்டா கேட்டதற்கு, ஆப்பாயில் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஓட்டலில் பணிபுரியும் சரவணன், மணிகண்டன், பாலசுப்ரமணியன், செந்தில்குமார் ஆகியோர் கட்டையாலும், கையாளும் தாக்கியதாக கூறப்படுகிறது.
8 பேர் மீது வழக்கு
இதில் பாக்யராஜ், ராமராஜ் ஆகியோர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கருப்பண்ணன் கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் தொழிலாளர்கள் சரவணன், மணிகண்டன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் தொழிலாளி பாலசுப்பிரமணியன்(39), தன்னை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில் பாக்கியராஜ், ராமராஜ், சுவாமிநாதன் சதீஷ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.