விழுப்புரம்
இரு தரப்பினரிடையே தகராறு; 7 பேர் மீது வழக்கு
|விழுப்புரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி பூபந்து(வயது 57). கிருஷ்ணமூர்த்தியும், அதே கிராமத்தை சேர்ந்த சாரங்கம் என்பவரும் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு பூர்வீக வீடு மற்றும் வீட்டுமனையுடன் 3 சென்ட் இடம் உள்ளது. இதில் சாரங்கம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பூபந்து தரப்பினர் இதுதொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் பூபந்து, சாரங்கம் குடும்பத்தினரிடம் சென்று வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு சாரங்கம், ராமச்சந்திரன், சசி, சாரங்கம் மனைவி விருதாம்பாள் ஆகியோர் சேர்ந்து பூபந்துவிடம் பிரச்சினை செய்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து இருதரப்பினரும் காணை போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் பூபந்து கொடுத்த புகாரின் பேரில் சாரங்கம் உள்ளிட்ட 4 பேர் மீதும், விருதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.