பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம்
|தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஊத்துக்கோட்டை,
வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகமாகி பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அணையின் பாதுகாப்பை கருதி நேற்று முன்தினம் மதியம் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 500 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. மாண்டஸ் புயல் கரை கடந்தும் பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகியது. மழை நீர் வினாடிக்கு 6,076 கன அடி, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 610 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது.
தண்ணீர் வரத்து அதிகமாகியதை கருத்தில் கொண்டு நேற்று இரவு தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதை எடுத்து கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று இரவு 8 மணிக்கு நீர்மட்டம் 34 அடியாக பதிவாகியது. 2.823 டி.எம்.சி. இருப்பு இருந்தது.