தஞ்சாவூர்
குடும்பத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளி
|குடும்பத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளி
திருச்சிற்றம்பலம் அருகே குடும்பத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளி தனக்கு வீடு, 3 சக்கர சைக்கிள் வழங்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உப்பு விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வசித்து வந்தவர் செல்வம். விவசாயி.
இவரது மனைவி பெரியநாயகி. இவர்களது மகன்கள் பிரசாந்த், பிரகதீஸ்வரன்(வயது 25). பெரியநாயகி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும், செல்வம் கடந்த ஆண்டும் இறந்துவிட்டனர். பிரசாந்தும் பிரகதீஸ்வரனும் தனிமையில் வசித்து வந்தனர். பிரசாந்த் கடந்த 15 தினங்களுக்கு முன்பு, திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் கிராமத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து விட்டார்.
குடும்பத்தை இழந்து தவிப்பு
பிரசாந்தின் தம்பி பிரகதீஸ்வரன் 2 கால்களும் முழுமையாக நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். தனக்கிருந்த ஒரே துணையான அண்ணன் பிரசாந்த்தும் விபத்தில் இறந்துவிட்ட நிலையில், தனக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு ஓட்டு வீட்டில் பிரகதீஸ்வரன் தனிமையில் வசித்து வருகிறார். தனது தந்தை காலத்தில் கட்டப்பட்ட ஓட்டு வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து தனது அத்தை வழங்கும் உணவை நம்பி பிரகதீஸ்வரன் வாழ்ந்து வருகிறார்.
கலெக்டருக்கு கோரிக்கை
தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு பிரகதீஸ்வரன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டு 2 கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளேன். நான் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு சொந்தமாக உள்ள இடத்தில் குடியிருப்பதற்கு ஒரு வீடும், பிற இடங்களுக்கு செல்வதற்கு ஒரு 3 சக்கர சைக்கிளும் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.