திருவள்ளூர்
திருவாலங்காடு அருகே மாற்றுத்திறனாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|திருவாலங்காடு அருகே மாற்றுத்திறனாளியை சரமாரியாக அரிவாள் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த வரதன் மகன் கோபி (வயது 38). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த 10 ஆண்டுகளாக திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் முல்லை நகரில் வசிக்கும் கோவிந்தன் என்பவரது வீட்டில் கோபி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கூலிக்கு கால்நடைகளை மேய்க்கும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல கால்நடைகளை மணவூர் பெரிய ஏரி அருகே மேய்த்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் கோபியை தலை மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கோபி கீழே சரிந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாற்றுத்திறனாளி கோபியை தாக்கிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.